ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாக ‘மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்’-காங்கிரஸ் ஆவேசம்

ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் ஆவேசமாக கூறியது.

Update: 2020-09-16 23:37 GMT
புதுடெல்லி, 

ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் ஆவேசமாக கூறியது...

கொரோனா பெருந்தொற்று குறித்தும், சுகாதார மந்திரி அளித்த அறிக்கை பற்றியும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா (காங்கிரஸ்), “கொரோனாவில் 10 லட்சம் பேருக்கு 55 பேர் பலி என்பது உலகின் மிக குறைந்த அளவுகளில் ஒன்று என சுகாதார மந்திரி கூறினார். ஆனால் இலங்கையிலும், தென் ஆப்பிரிக்காவிலும் குறைந்த அளவு பலி பதிவாகி உள்ளது. 45 லட்சம் பேருக்கு பாதிப்பு என மந்திரி கூறுகிறார். ஆனால் உண்மையில் மந்திரி அறிவித்தபோது, அந்த எண்ணிக்கை தாண்டி விட்டது” என கூறினார்.

“ஊரடங்கு முடிவால் 14-29 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து தடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி கூறுகிறார், இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் உள்ளது?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பா.ஜனதா எம்.பி. வினய் சஹஸ்ரபுத்தே பதில் அளிக்கையில், “கொரோனா முடிவு எடுக்கும் பணியின்போது மாநில முதல்-மந்திரிகள் பலமுறை ஆலோசிக்கப்பட்டனர். சுமார் 15 சந்திப்புகளின்போது, முதல்-மந்திரிகள் யாரும் ஊரடங்கை எதிர்க்க கூடாது என பிரதமர், மந்திரிகள் கூறவில்லை. இதில் எதிர்க்கட்சிகளுக்கு இருமுக நடத்தை கூடாது” என கண்டித்தார்.

பல மாநிலங்கள் ஊரடங்கை அறிவியல் நடைமுறைப்படுத்தவில்லை, மராட்டிய மாநிலத்தில் தொற்றுநோய் நிர்வாகம் பாதிக்கப்பட்டது என கூறிய அவர், தனது குடும்பம் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது, நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டவிதமும், மும்பை வீதிகள் சுத்தப்படுத்திய விதமும் ஒப்பிட முடியாதபடிக்கு இருந்ததாக சாடினார். அதே நேரத்தில் இந்த பிரச்சினையை அரசியலாக்க கூடாது என அவர் கேட்டுக்கொண்டார்.

ஊரடங்கை அரசு உரிய முன்னறிவிப்பின்றி அறிவித்ததை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தீரக் ஓ பிரையனும் கண்டித்தார். மார்ச் 26-க்கு முன்பாக ஒரு காணொலி காட்சி மாநாடாவது நடத்தப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பினார். பெருந்தொற்றின்போது மாநிலங்களுக்கு போதுமான உதவியை மத்திய அரசு செய்யவில்லை எனவும் அவர் ஆவேசமாக கூறினார்.

பிஜூஜனதாதளம் எம்.பி., பிரசன்னா ஆச்சார்யா பேசுகையில், “தற்போதைய வளர்ச்சி வீதத்தை பார்த்தால், இந்தியா கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயாளிகள் எண்ணிக்கையில்தான் முதல் இடம் பிடிக்கும்” என கிண்டலடித்தார். மாநில அரசுகளின் நிதிநிலை சரி இல்லை என கூறிய அவர், மாநிலங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு வழங்க முன்வரவில்லை எனவும் குறை கூறினார்.

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி. கேசவராவ் பேசும்போது பொருளாதார நெருக்கடி நிலவுவதாக குறிப்பிட்டார். ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. ராமசந்திர பிரசாத் சிங், புலம்பெயர் தொழிலாளர் என்ற வார்த்தேயே அவமதிப்பானது என வேதனை தெரிவித்து, அந்த வார்த்தையை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்திய கம்யூ. எம்.பி. எலமரம் கரீம், “மகாபாரத போர் 18 நாளில் வென்றதாகவும், கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாளில் வெல்லப்படும் எனவும் பிரதமர் கூறினாரே, அது என்ன ஆயிற்று?” என வினவினார்.

இன்றும் விவாதம் தொடர்ந்து நடக்கிறது.

மேலும் செய்திகள்