ஹரியானாவில் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம்: ஊர்மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

ஹரியானாவில் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைவில் நியாயம் வழங்க வேண்டி ஊர்மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.

Update: 2020-10-29 15:25 GMT
சண்டிகர்,

ஹரியானா மாநிலம் பல்லாப்கர் பகுதியில் கடந்த 26 ஆம் தேதி கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக வந்த பெண்ணை கல்லூரி வளாகத்திற்கு வெளியே இரண்டு நபர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிந்த நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர்.

இதனை தொடர்ந்து உயிரிழந்த அந்த பெண்ணின் பெயர் நிகிதா(வயது 21) என்பதும், கல்லூரியில் இறுதி ஆண்டு தேர்வு எழுத வந்த அவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தௌஃபீக் மற்றும் ரீஹான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தௌஃபீக் மற்றும் ரீஹான் இருவரும் தற்போது 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் நிகிதாவிற்கு தௌஃபீக் ஏற்கனெவே அறிமுகமானவர் என்று தெரிய வந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிகிதாவை தௌஃபீக் வற்புறுத்தி வந்ததாக கூறப்பட்டுகிறது. இது தொடர்பாக நிகிதாவின் குடும்பத்தினர் தௌஃபீக் மீது கடந்த 2018ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை அஜ்ரு என்ற நபர் வழங்கியிருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அஜ்ருவை இன்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து இந்த சம்பவத்தில் உயிரிழந்த 21 வயது பெண் நிகிதாவின் குடும்பத்திற்கு நியாயம் வழங்கும் வகையில், குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பல்லாப்கர் பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பேரணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் இந்த பேரணி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்