வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது - மத்திய அரசு
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் இயங்கி வரும் பல்வேறு தனியார் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து கொடையாளர்கள் வழங்கும் நிதி உதவிகளை பெற்று வருகின்றன. அவ்வாறு நிதி உதவி பெறும் அமைப்புகள் கல்வி, ஆன்மீகம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்காக வெளிநாட்டு நிதியை பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் தற்போது மத்திய அரசு சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் நிதி உதவியை பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ரூபாய் 15 லட்சத்தை நலத்திட்டத்திற்காக செலவிட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.