கேரள போலீஸ் சட்ட திருத்தம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது அல்ல- பினராயி விஜயன் விளக்கம்

கேரள போலீஸ் சட்ட திருத்தம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Update: 2020-11-22 21:19 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் வகையில் கேரள போலீஸ் சட்டம் திருத்தப்பட்டு உள்ளது. அதன்படி இந்த சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த சட்ட திருத்தம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் இந்த சட்டதிருத்தம் பாரபட்சமற்ற இதழியல் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது அல்ல என முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று விளக்கம் அளித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படக்கூடாது. அதைப்போல தனிநபர் சுதந்திரம் என்ற பெயரில் பத்திரிகை சுதந்திரம் மறுக்கக்கூடாது. இந்த இரண்டையும் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது. அந்தவகையில் தனிநபர் கண்ணியத்தை மீறுவோருக்கு எதிராக சர்வதேச தரத்திலான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராகவே கேரள போலீஸ் சட்டம் திருத்தப்பட்டு உள்ளது என்று கூறினார்.

சமூக ஊடகங்கள் குறிப்பாக ஆன்லைன் ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்பப்படுவதாக ஏராளமான புகார்கள், குறிப்பாக பிரபலங்களிடம் இருந்து பல புகார்கள் வருவதாக கூறிய முதல்-மந்திரி, உண்மைக்கு மாறான தகவல்கள் மூலம் அவதூறு பரப்புவதால், ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்