100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது

100 வயதை எட்டிய கேசவ் நார்கர் பாபத் மத்திய ரெயில்வே, இந்திய பென்னின்சுலா ரெயில்வே ஆக இருந்த போது கடந்த 1951-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

Update: 2020-11-23 23:41 GMT
மும்பை, 

மராட்டிய மாநிலம் புசாவல் பகுதியை சேர்ந்தவர் கேசவ் நார்கர் பாபத். மத்திய ரெயில்வே, இந்திய பென்னின்சுலா ரெயில்வே ஆக இருந்த போது கடந்த 1951-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ரெயில்வே கார்டாக வேலை பார்த்த அவர், கடந்த 1978-ம் ஆண்டு பணிஓய்வு பெற்றார்.

இந்தநிலையில் அவர் கடந்த 21-ந் தேதி 100 வயதை எட்டினார். வயதில் சதம் அடித்த மூத்த ஊழியரான அவரை மத்திய ரெயில்வே கவுரவிக்க விரும்பியது. இதையடுத்து மத்திய ரெயில்வே நிர்வாகம் அவரது ஓய்வு ஊதியத்தை இரட்டிப்பாக அதிகரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளது.

மேலும் அவரது 100-வது பிறந்தநாளையொட்டி புசாவல் கோட்ட மேலாளர் விகாஸ் குமார் மற்றும் அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று அவருக்கு பூங்கொத்து, இனிப்பு மற்றும் வாழ்த்து கடிதங்களை கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.

100 வயதான கேசவ் நார்கர் பாபத் முதலில் ராணுவத்தில் பணியாற்றியதாகவும் அதில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று ரெயில்வேயில் பணிக்கு சேர்ந்து உள்ளார். அவர் 2-ம் உலகப்போரில் பங்கு பெற்று இருந்ததாகவும், போருக்காக பல நாடுகளுக்கு பயணம் செய்ததாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்