கர்நாடகா வளர்ச்சி ஆய்வு கூட்டத்தில் எம்.எல்.ஏ.-எம்.எல்.சி. கைகலப்பு, மோதலால் பரபரப்பு
எம்.எல்.சி. பீம்ராவுக்கும், எம்.எல்.ஏ. சித்துவுக்கும் இடையே வளர்ச்சி பணிகள் தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.;
பெங்களூரு,
கர்நாடகாவின் பிதர் மாவட்டத்தில் காலாண்டு வளர்ச்சி ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஹுமனாபாத் தொகுதியின் எம்.எல்.ஏ. சித்து பாட்டீல் கலந்து கொண்டார். காவல் துறை உயரதிகாரிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் எம்.எல்.சி. பீம்ராவ் பாட்டீலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, எம்.எல்.சி. பீம்ராவுக்கும், எம்.எல்.ஏ. சித்துவுக்கும் இடையே வளர்ச்சி பணிகள் தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வனநிலம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.
ஒருவரையொருவர் கை நீட்டி குற்றச்சாட்டுகளை கூறி கொண்டிருந்தனர். அப்போது, பீம்ராவ் திடீரென எழுந்து சென்று மற்றொருவரை (எம்.எல்.ஏ. சித்து) அடிக்க பாய்ந்ததும், கூட்டத்தினரிடையே பரபரப்பானது.
உடனே காவல் துறை உயரதிகாரி ஒருவர் ஓடி சென்று இருவரையும் சமரசம் செய்து அவரவர் இருக்கையில் அமர வைக்க முயற்சி மேற்கொண்டார்.
எனினும், அது பலனளிக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பிதர் மாவட்ட பொறுப்பாளரான மந்திரி ஈஸ்வர் காந்திரே கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவித்து விட்டு எழுந்து சென்றார்.
கூட்டத்தில், அதிகாரிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் என பலரும் சுற்றியிருக்க அவர்கள் இப்படி நடந்து கொண்டது சர்ச்சையானது.