பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பதற்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு

பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கும் யோசனைக்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதை உடனே கைவிடுமாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-11-24 22:03 GMT
புதுடெல்லி, 

பெருநிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வணிக நிறுவனங்களின் பிடியில் இருந்து வங்கிகள் மீட்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50 ஆண்டுகளில் பெறப்பட்ட எண்ணற்ற நன்மைகளை, இந்த யோசனை சீர்குலைத்து விடும். இந்த யோசனையை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை. இதில் மோடி அரசின் கைங்கர்யம் தெரிகிறது. ரிசர்வ் வங்கியை தவறாக பயன்படுத்தி, மத்திய அரசு தனது செயல்திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் இதேபோல் ரிசர்வ் வங்கியை தவறாக பயன்படுத்தியது.

வங்கிகள் எப்போதும் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். இந்த திட்டம், பொதுத்துறை வங்கிகளை பலவீனப்படுத்தி விடும். வங்கிகள் தொடங்கும் உரிமத்தை யார் பெறுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அரசியல் தொடர்புடைய பெருநிறுவனங்களுக்குத்தான் உரிமம் கிடைக்கும்.

இது, வங்கிகளை கைக்குள் போட்டுக்கொள்ளும் சதித்திட்டம். ஆகவே, இந்த பிற்போக்குத்தனமான யோசனையை அமல்படுத்தக்கூடாது. இதை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும். இந்த யோசனைக்கு எதிராக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றை அணுகி பொதுக்கருத்தை உருவாக்குவோம். இதை எல்லோரும் எதிர்க்க வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்