1 ரூபாய்க்கு உணவு: பா.ஜ.க. எம்.பி. காம்பீரின் புதிய திட்டம் அறிமுகம்

டெல்லியில் பா.ஜ.க. எம்.பி. கவுதம் காம்பீர் 1 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

Update: 2020-12-24 12:54 GMT
புதுடெல்லி,

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்.  கடந்த 2019ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்து வருகிறார்.  காம்பீர் அரசியலில் நுழைந்த பின்னர் மக்கள் நல பணியாற்ற வேண்டும் என்ற வேட்கை கொண்டுள்ளார்.

அவர் சார்ந்த கிழக்கு டெல்லி தொகுதியின் காந்தி நகர் பகுதியில் ஏக் ஆஷா ஜன ரசோய் என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார்.  இதன்படி, கவுதம் காம்பீர் அறக்கட்டளையானது 1 ரூபாய்க்கு உணவு வழங்கும்.

இந்த சமூக நலப்பணி பற்றி காம்பீர் கூறும்பொழுது, உணவின்றி வெறும் வயிற்றுடன் ஒருவரும் உறங்க செல்ல கூடாது என நாங்கள் விரும்புகிறோம்.  அதனால், டெல்லியில் இதுபோன்று 5 அல்லது 6 சமையற்கூடங்களை விரைவில் திறக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

சாதி, மதம், இனம் அல்லது நிதி வசதி பேதமின்றி ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுகாதார உணவு பெறுவதற்கு உரிமை உள்ளது என நான் எப்பொழுதும் நினைப்பவன்.  வீடின்றி, கைவிடப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட கிடைக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின்படி, ஒரு தட்டு உணவுக்கு ரூ.1 கொடுக்க வேண்டும்.  நாளொன்றுக்கு மொத்தம் 500 பேருக்கு உணவு வழங்கப்படும்.  இரண்டாவது முறையாகவும் உணவு பெற்று கொள்ளலாம்.  உணவு தேவையானவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க, சுகாதாரம் நிறைந்த உணவு வழங்கப்படும் என காம்பீர் கூறியுள்ளார்.

எனினும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ள சூழலில், கேண்டீனில் ஒரு நேரத்தில் 50 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த ஒரு ரூபாயும் சமையற்கூடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பயன்படுத்தப்படும் என்றும் காம்பீர் கூறியுள்ளார்.  சிறப்பு நாட்களில் இந்த உணவில் அரிசி, பருப்பு மற்றும் காய்கறி கூட்டு ஆகியவை வழங்கப்படும் என்று காம்பீரின் உதவியாளர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்