அரசியல் லாபத்துக்காக விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - பிரதமர் மோடி

உங்கள் அரசியல் லாபத்துக்காக விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-12-25 10:22 GMT
படம்: ANI
புதுடெல்லி

உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ்  சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்வின்போது, 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

உழவர் கடன் அட்டை மூலம்   2.5 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

உழவர் கடன் அட்டை மூலம் ஆண்டுக்கு 4 சதவீதம்  என்கிற குறைந்த வட்டியில் கடன்பெறுவதை மற்ற விவசாயிகளுக்கு எடுத்துரையுங்கள்

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. இது நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் எந்த இடைத்தரகர்களுக்கும் பங்கு இல்லை. கமிஷனும் கொடுக்க தேவையில்லை. விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு செயல்படுகிறது.

80 சதவீத விவசாயிகளுக்கு குறைந்தளவு சொத்து உள்ளது. ஏழை விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டதால், அவர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டனர். சிறு விவசாயிகளின் நலனுக்காக எனதுஅரசு சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. விவசாயிகளுக்கு,சிறந்த காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்தோம். 

 மத்திய அரசு திட்டங்களை மேற்கு வங்க அரசு அனுமதிக்காததால், அவற்றின் பயன்களை மேற்குவங்காள விவசாயிகள் அடைய முடியவில்லை.

மம்தா பானர்ஜியின் கொள்கைகள் வங்காளத்தை அழித்துவிட்டது.  விவசாயிகளுக்கு எதிரான மம்தாவின் நடவடிக்கைகள் என்னைப் புண்படுத்தியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் பற்றியும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை கைவிடப்படும் என்றும் விவசாயிகளிடம் எதிர்க்கட்சியினர் தவறான தகவலைப் பரப்புகின்றனர்.   சில போராட்டங்களுக்கு பின்அரசியல் காரணங்கள் உள்ளன. வேளாண் சட்டத்தை வைத்து சிலர் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிட்டு, நமது பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் அழிக்கின்றன.உங்கள் அரசியல் லாபத்துக்காக விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் .

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், விளம்பரத்திற்காக போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். கேரளாவில் விவசாய பொருள் மார்க்கெட் குழு(ஏபிஎம்சி) இல்லை. அதனை ஏன் அம்மாநில அரசு கொண்டு வரவில்லை. சொந்த நலனுக்காக தான் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விட்டுள்ளன. எதிர்ப்பு தெரிவிக்க, எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. தவறாக வழிநடத்த உரிமையில்லை.

 விவசாயத்துறையை நாம் நவீனப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.  வேளாண்துறைச் சீர்திருத்தங்களால் விவசாயிகள் விளைபொருட்களை எங்கும் யாருக்கும் விற்க முடியும் என்பதால் நல்ல விலை கிடைக்கும். வேளாண் சட்டங்களால், ஒரு மண்டிகூட மூடப்படாது. இவ்வாறு அவர் பேசினார். முந்தைய அரசு விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை மறந்துவிட்டதாகவும், முந்தைய அரசின் கொள்கைகளால் ஏழைகள் மேலும் ஏழைகளானதாகவும் மோடி தெரிவித்தார்.        

மேலும் செய்திகள்