கவர்னரை நீக்கக்கோரி ஜனாதிபதிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்

மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும், அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்துவருகிறது.

Update: 2020-12-30 16:25 GMT

கொல்கத்தா, 

மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும், அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்துவருகிறது. இந்நிலையில், ஜெகதீப் தங்கரை கவர்னர் பதவியில் இருந்து நீக்கக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சுகேந்து சேகர்ராய் கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கவர்னர் ஜெகதீப் தங்கர் தனக்கான அரசியல்சாசன எல்லையை தொடர்ந்து மீறிச் செயல்பட்டு வருகிறார். திரிணாமுல் அரசாங்கம், அதன் நிர்வாகம் பற்றி பொதுவெளியில் கருத்துக் கூறி வருகிறார். 

மேற்கு வங்காளத்தின் 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதற்குமுன் இவ்வாறு நடந்தது இல்லை. மத்திய பா.ஜ.க. அரசின் பின்னணியில், திரிணாமுல் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே அவர் இவ்வாறு செயல்பட்டு வருகிறார். எனவே கவர்னரை அப்பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளோம்’’ என்றார்.

இந்நிலையில் இந்த வி‌ஷயம் தொடர்பாக கருத்துக் கூறிய பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் விஜய் வர்கியா, ‘‘திரிணாமுல் காங்கிரஸ், அச்சத்தினாலேயே இவ்வாறு செயல்படுகிறது. கவர்னர் தனது அரசியல் சாசன கடமையைத்தான் செய்து வருகிறார். எனவே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதத்துக்கு எந்தப் பலனும் இருக்காது’’ என்றார்.

 

மேலும் செய்திகள்