காஷ்மீரில் குடியேற்ற சான்றிதழ் பெற்ற நகை வியாபாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த நகை வியாபாரி, குடியேற்ற சான்றிதழ் பெற்றதால் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-01-02 02:35 GMT
கோப்பு படம்
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அந்த மாநிலமும் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் காஷ்மீரில் அசையா சொத்துக்களை வாங்க வழி வகை செய்யப்பட்டது. எனினும், இதற்கு அங்குள்ள  அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  அதேபோல்,  பயங்கரவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. 

இந்த நிலையில்,  ஸ்ரீநகரில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சந்தைப் பகுதியில் வைத்து 65-வயதான நகை வியாபாரி சத்பால் நிசால் என்பவர்  பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட நகை வியாபாரி சத்பால் நிசால்   பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் காஷ்மீரில் வசித்து வரும் இவர் அண்மையில்  காஷ்மீரில் குடியேற்ற சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது.  இதனால் கோபம் அடைந்த பயங்கரவாதிகள் சத்பால் நிசாலை சுட்டுக்கொன்றதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 

சத்பால் நிசால் கொலைக்குப் பொறுப்பேற்ற உள்ளூர் பயங்கரவாத இயக்கம் ஒன்று, கடும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், யாரேனும் குடியேற்ற சான்றிதழ் பெற்றால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கருதப்படுவர். அவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாதிகளின் இந்த எச்சரிக்கை காஷ்மீரில் வசிக்கும் பிற மாநிலத்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குக் குடியேற்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் உள்ளூர் வாசிகள் ஆவர். ஆனால், வெளிநபர்கள் எத்தனை பேர் குடியேற்ற சான்றிதழ் பெற்றுள்ளனர் என்பது தொடர்பாகத் தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

மேலும் செய்திகள்