காகிதமில்லா பட்ஜெட்: உத்தரபிரதேச எம்.எல்.ஏ.க்கள் ‘டேப்லட்’ வாங்க அரசு அறிவுறுத்தல்

உத்தரபிரதேசத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி எம்.எல்.ஏ.க்கள் ‘டேப்லட்’ வாங்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

Update: 2021-02-07 01:48 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநில அரசு, வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரை காகிதமில்லா கூட்டத்தொடராக நடத்தத் திட்டமிட்டுள்ளது.அதையொட்டி, அனைத்து எம்.எல்.ஏ.க்களும், எம்.எல்.சி.க்களும் ‘டேப்லட்’ எனப்படும் கைக்கணினி வாங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என மாநில துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் 403 எம்.எல்.ஏ.க்களும், 100 எம்.எல்.சி.க்களும் உள்ளனர்.

‘டேப்லட்’டை பயன்படுத்துவதற்கு மாநில மந்திரிகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுக்கும் அவ்வாறு பயிற்சி வழங்கப்படும் என்றும் தினேஷ் சர்மா கூறினார்.கடந்த 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வழக்கமான காகித ஆவணத்துக்குப் பதிலாக ‘டேப்லட்’ மூலம் உரையை வாசித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்