கேரளாவில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது: முதல் மந்திரி பினராயி விஜயன் உறுதி

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Update: 2021-02-13 18:53 GMT
திருவனந்தபுரம்,

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடந்த தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.

பாகிஸ்தான் பிரிவினை மற்றும் வங்காளதேசம் உருவாக்கத்தின்போது இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த மதுவா சமூகத்தினர் வாழும் பகுதியில், அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து அமித்ஷா பேசினார்.  அவர், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடிந்த பின்பு குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார்.

இதனை சுட்டி காட்டி பேசிய கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், கேரளாவில் இந்த பேரிடரை அரசு அனுமதிக்காது என கூறினார்.  ஒரு மாநில அரசாக, இதனை அமல்படுத்த முடியாது என எப்படி நாங்கள் கூற முடியும் என எங்களிடம் கேட்கப்பட்டது.

நாங்கள் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம்.  சி.ஏ.ஏ.வை நாங்கள் அமல்படுத்த போவதில்லை என கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டம் கொண்டு வரப்பட்டவுடன் நாடு முழுவதும் அதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.  கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு அரசு, இந்த சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என கடந்த ஆண்டு கூறியது.  சுப்ரீம் கோர்ட்டில் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளா ஆகும்.

மேலும் செய்திகள்