வாஜ்பாய் அரசுக்கு புரட்சி தலைவி முழுமனதுடன் வழங்கிய ஆதரவை பா.ஜ.க. மறக்காது; மத்திய மந்திரி பேச்சு

வாஜ்பாயின் முதல் அரசுக்கு, தமிழகத்தின் மகள் புரட்சி தலைவி அவர்கள் முழுமனதுடன் வழங்கிய ஆதரவை பா.ஜ.க.வால் மறக்க முடியாது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

Update: 2021-02-21 16:54 GMT
சேலம்,

தமிழக பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில தலைவர் எல்.முருகன், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் ரவி, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லி விமானநிலையத்தில் இருந்து தமிழகம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் கமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த அவர், பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு சென்றார்.

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. இளைஞர் அணி மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், தமிழில் அதிகம் பேச விரும்பினேன்.  ஆனால், அழகிய மொழியான தமிழில் பேச முடியாததற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின், இந்தியாவின் அடுத்த வளர்ச்சி கதையை நாம் எழுத இருக்கிறோம்.  நமது நாட்டில் நாள்தோறும் அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது.  அதனால், பங்கு சந்தையானது உயர்வதுடன் மட்டுமின்றி ஜல்லிக்கட்டு விளையாடவும் செய்கிறது என பேசியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.  அது தமிழகத்திற்கான மரியாதை இல்லையா? கடந்த 1974ம் ஆண்டு இலங்கைக்காக கச்சத்தீவை காங்கிரஸ் விட்டு கொடுத்தபொழுது, அந்த முடிவுக்கு வாஜ்பாய் கண்டனம் தெரிவித்ததுடன், அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வேன் என்றும் பேசினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதல் அரசுக்கு, தமிழகத்தின் மகள் புரட்சி தலைவி ஜெயா அம்மா அவர்கள் முழுமனதுடன் வழங்கிய ஆதரவை பா.ஜ.க.வால் மறக்க முடியாது என்றும் சிங் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்