காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருகிறது என்பதே உண்மை ; அதிருப்தி தலைவர்கள்

காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவதாக நாங்கள் உணர்கிறோம் என கபில் சிபல் கூறினார்.

Update: 2021-02-27 22:26 GMT
ஜம்மு, 

காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளை மறுசீரமைத்து, கட்சிக்கு வலிமையான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சி தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த தலைவர்களின் அதிருப்தி கோஷத்தால் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

மேற்படி தலைவர்களில் சிலர் நேற்று ஜம்முவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். இதில் அவர்களில் ஒருவரான கபில்சிபல் பேசும்போது, ‘காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவதாக நாங்கள் உணர்கிறோம். எனவே அதற்கு புத்துணர்ச்சி அளித்து, அதன் மகிமையை மீட்டெடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. அதற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். கட்சியை வலிமைப்படுத்துவதற்காக கடந்த காலத்தை போல உழைக்கப்போகிறோம்’ என்று கூறினார்.

குலாம்நபி ஆசாத் மாநிலங்களவையில் இருந்து பணி நிறைவு பெற்றிருக்கும் நிலையில் அவரது அனுபவத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தாது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் குலாம்நபி ஆசாத், மணிஷ் திவாரி, பூபிந்தர் சிங் ஹூடா, ராஜ் பப்பர், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கட்சி மற்றும் நாட்டை பலப்படுத்துவதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக மேடையில் உறுதி எடுத்துக்கொண்ட இந்த தலைவர்கள், பா.ஜனதா கட்சி நாட்டின் வளங்களை தனது கட்சியை பலப்படுத்துவதற்காக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்