இளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய சிவசேனா மந்திரி ராஜினாமா

மராட்டியத்தில் இளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ரதோட் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.;

Update:2021-02-28 17:29 IST
புனே,

மராட்டியத்தில் சிவசேனா கட்சி கூட்டணிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது.  முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையில் அவரது கட்சியை சேர்ந்த சஞ்சய் ரதோட் வனத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மந்திரி பதவியில் இருந்து சஞ்சய் ரதோட் இன்று ராஜினாமா செய்துள்ளார்.  இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எனது ராஜினாமா கடிதத்தினை முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவிடம் அளித்துள்ளேன்.  சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற அனுமதிக்கமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது எச்சரிக்கை விடும் வகையில் உள்ளது.

நான் இதில் இருந்து விலகி இருக்கிறேன்.  புனேவில் இந்த மாதம் பெண் ஒருவர் இறந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மராட்டியத்தில் டிக்-டாக்கில் பிரபலமான இளம்பெண் பூஜா சவான் (வயது23).  இவர், புனே ஹடாப்சர் பகுதியில் கடந்த 8ந்தேதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண்ணின் மரணத்திற்கும், சிவசேனாவை சேர்ந்த வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோடுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த விவகாரத்தில் சஞ்சய் ரதோட் பதவி விலக வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியது. இந்தநிலையில் மந்திரி சஞ்சய் ரதோட், தனக்கும் இளம்பெண்ணின் மரணத்துக்கும் தொடர்பு கிடையாது என கூறினார்

பா.ஜ.க. தொடர்ந்து இந்த விவகாரத்தில் நெருக்கடி அளித்து வந்த நிலையில், மராட்டிய சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள சூழலில் ரதோட் ராஜினாமா முடிவை வெளியிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்