வருமான வரி ஏய்ப்பு புகார்; நடிகை டாப்சி, அனுராக் காஷ்யப் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை - ஒரே நேரத்தில் 30 இடங்களில் நடந்தது

நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் என 30 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2021-03-04 01:39 GMT
மும்பை,

தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் தமிழில் அறிமுகமான நடிகை டாப்சி. அதன்பின்னர் அஜித்தின் ‘ஆரம்பம்’, ராகவா லாரன்சின் ‘காஞ்சனா- 2’, ஐஸ்வர்யா தனுஷின் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் இந்தி திரையுலகின் முக்கிய நடிகையாக உள்ளார்.

இதேபோல பிரபல சினிமா இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

டாப்சி நடித்திருந்த ‘மன்மார்ஜியான்’ படத்தை அனுராக் காஷ்யப் இயக்கினார். இதேபோல திரைக்கு வர உள்ள ‘தொபாரா’ திரைப்படத்திலும் இவர்கள் இணைந்து உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு அனுராக் காஷ்யப் பாந்தம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதில் விக்ரமாதித்யா மோத்வானே, விகாஷ் பால், மது மந்தேனா ஆகியோரும் பங்குதாரர்களாக இருந்தனர். இந்த நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் செயல்பட்ட காலத்தில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அனுராக் காஷ்யப் மற்றும் அவரது பட தயாரிப்பு நிறுவன பங்குதாரர்கள், அதில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல அனுராக் காஷ்யப்புடன் இணைந்து பணியாற்றிய நடிகை டாப்சிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

மும்பை, புனேயில் உள்ள 30 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. இதில் வரி ஏய்ப்பு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் நடிகை டாப்சி கருத்து வெளியிட்டு இருந்தார். அனுராக் காஷ்யப் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இந்தநிலையில் இவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோரிடம் வருமான வரி சோதனை நடத்தி இருப்பதற்கு மராட்டியத்தை சேர்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்