மத்திய அரசு பட்டியல் வெளியீடு இந்தியாவில் அமைதியாக வாழ தகுதியான நகரங்கள் எவை? 4-வது இடத்தில் சென்னை

இந்தியாவில் தொல்லைகள் இன்றி அமைதியாக வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நகரங்களில் பெங்களூருவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சென்னை 4-வது இடத்தில் உள்ளது.

Update: 2021-03-05 00:47 GMT
புதுடெல்லி,

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, ‘நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு-2020’ மற்றும் அமைதியாக வாழ்வதற்கு தகுதியான நகரங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டார். இந்த 2 பிரிவுகளிலும் 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகமான நகரங்கள், குறைவான நகரங்கள் என தனித்தனியாக பிரித்து அவற்றில் சிறந்த தலா 10 நகரங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன. அந்த நகரங்கள் விவரம் வருமாறு:-

வாழத் தகுதியான 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. புனே மற்றும் ஆமதாபாத் நகரங்கள் 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்து உள்ளன. இந்த பட்டியலில் சென்னைக்கு 4-வது இடம் கிடைத்து உள்ளது.

5-வது இடத்தை சூரத், 6-வது இடத்தை நவி மும்பை ஆகியவை பிடித்து உள்ளன. கோவை மாநகரம் 7-வது இடத்தில் உள்ளது.

வதோதரா, இந்தூர் மற்றும் கிரேட்டர் மும்பை நகரங்கள் 8 முதல் 10 வரையிலான இடங்களை பிடித்து உள்ளன.

10 லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ள நகரங்களில் சிம்லா முதலிடத்தை பிடித்து உள்ளது. புவனேஸ்வர், சில்வாசா, காக்கிநாடா ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும், சேலம் மற்றும் வேலூர் ஆகிய நகரங்கள் 5 மற்றும் 6-வது இடங்களையும், காந்திநகர், குருகிராம், தவான்கீர் ஆகிய நகரங்கள் அதற்கு அடுத்த இடங்களையும் பிடித்து உள்ளன. 10-வது இடத்தை திருச்சி பிடித்துள்ளது.

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சிறந்த நகராட்சிகள் பிரிவில் இந்தூர் முதலிடத்தை பிடித்துள்ளது. சூரத், போபால், பிம்ப்ரி சின்ஞ்வாடு, புனே, ஆமதாபாத், ரெய்ப்பூர், கிரேட்டர் மும்பை, விசாகப்பட்டினம், வதோதரா ஆகியவை 2 முதல் 10 வரையிலான இடங்களை பெற்றுள்ளன. இந்த பிரிவில் தமிழக மாநகராட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகள் பிரிவில் புதுடெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. திருப்பதி, காந்திநகர், கர்னால் ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களையும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகள் 5 மற்றும் 6-வது இடங்களையும், பிலாஸ்பூர், உதய்ப்பூர், ஜான்சி ஆகியவை 7, 8 மற்றும் 9-வது இடங்களையும் பிடித்துள்ளன. திருநெல்வேலி மாநகராட்சி 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த பட்டியல், மொத்தம் 111 நகரங்களை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டு உள்ளது. வாழ தகுதியான நகரங்கள் பட்டியல் அங்குள்ள வாழ்க்கைத்தரம், பொருளாதார திறன், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டும், சிறந்த நகராட்சிகள் பட்டியல் நிர்வாக ரீதியில் அவற்றின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் தயாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்