திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும் - தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், கோவிலுக்கு வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்பே வாங்கிய கொரோனா சான்றை கொண்டு வர வேண்டும், என தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-06 04:50 GMT
திருமலை,

திருமலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை திருமலை அன்னமயபவனில் தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பங்கேற்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகளை கேட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி வழங்கப்படும். கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முழுமையாக வழங்கப்படும்.

பஞ்ச காவ்யா தயாரித்த பொருட்களை கோவிலில் விற்பனை செய்யவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பசு பாதுகாப்புக்காகப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அகர்பத்தி, சோப்புகள் போன்ற 15 தயாரிப்புகளையும், ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் 15 தயாரிப்புகளையும் திருப்பதி தேவஸ்தான பஞ்ச காவ்யா பிரிவு விரைவில் தயாரிக்கும். இதற்காக தேவஸ்தான ஆயுர்வேத மருத்துவத்தில் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்ேப கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்று வர வேண்டும். கொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்