ராஜஸ்தான்: காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பியோட்டம்

ராஜஸ்தானில் சிறைத்துறை காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பிச்சென்றுள்ளனர்.

Update: 2021-04-06 10:18 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ப்பூர் மாவட்டம் பஹ்லோடி நகரில் கிளை சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் நேற்று இரவு சிறைத்துறை காவலர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, கைதிகள் சிலர் தாங்கள் மறைத்துவைத்திருந்த மிளகாய்பொடியை சிறைத்துறை காவலர்கள் மீது வீசி காவலர்களை சரமாரியாக தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச்சென்றனர். மொத்தம் 16 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பஹ்லோடி துணை ஆட்சியர் யஸ்பால் கூறுகையில், தகவல் அறிந்த உடன் நான் கிளை சிறைச்சாலைக்கு விரைந்து சென்றேன். அங்கு சிறைச்சாலையின் தரையில் காய்கறிகள் கொட்டிக்கிடந்தன. என்ன நடந்தது என்று சிறைத்துறை காவலர்களிடம் கேட்டதற்கு கைதிகள் தங்கள் மீது காய்கறி மற்றும் மிளகாய் பொடியை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர் என்று கூறினர். இதனால், இது குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளேன். தப்பிச்சென்ற கைதிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதற்கிடையில், சிறைக்கைதிகள் தப்பிச்சென்ற விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், கவனக்குறைவாக செயல்பட்ட சிறைத்துறை காவலர்கள் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்