தடுப்பூசி திருவிழா நடத்தவும் அழைப்பு கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை - மாநில முதல்-மந்திரிகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்-மந்திரிகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Update: 2021-04-08 18:30 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 1.26 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருவது மத்திய-மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதுவும் தடுப்பூசி பணிகளும் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், இந்த பெருந்தொற்று பரவல் மருத்துவ துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த நிலையில் அதிகரித்து வரும் இந்த தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசும், பிரதமர் மோடியும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே உயர்மட்ட அதிகாரிகளுடன் சமீபத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில், மாநிலங்களின் தொற்று நிலவரம், மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் போன்றவை குறித்து கேட்டறிந்த பிரதமர், தொற்றுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரிகளுக்கு எடுத்துரைத்தார்.

அந்தவகையில் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிரான ஆளுகையை மேலும் மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஆனால் கடந்த ஓராண்டு போராட்டத்தால் இந்த அமைப்பில் ஒருவித சோர்வும், கவனக்குறைவும் ஏற்பட்டிருப்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் கொரோனாவுக்கு எதிரான பிடியை நாம் அடுத்த 2-3 வாரங்களுக்கு இன்னும் இறுக்க வேண்டும். அத்துடன் நிர்வாகத்தையும் வலுப்படுத்த வேண்டும்.

இந்த வைரசை கையாளுவதற்கு நாடு ஏற்கனவே வைத்திருந்ததை விட தற்போது இன்னும் அதிகமான வளங்கள் உள்ளன. எனவே மிகச்சிறிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் மீது நமது கவனத்தை செலுத்த வேண்டும்.

தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, ‘பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை செய்தல்’, கொரோனா-பொருத்தமான நடத்தை மற்றும் கொரோனா மேலாண்மை ஆகியவை அவசியம் ஆகும். இந்த சூழலை கையாளுவதற்கு பொதுமக்களின் பங்களிப்புடன், நமது தலைசிறந்த டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மிகப்பெரும் உதவியை செய்துள்ளனர், தற்போதும் செய்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிரான ஆளுகை பல மாநிலங்களில் குறைந்துள்ளதால் தொற்று அதிகரித்து பிரச்சினைகள் பெருகியுள்ளன. எனவே வைரஸ் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் அவசியம்.

பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சையில் 5 மடங்கு மூலோபாயங்கள், கொரோனா-பொருத்தமான நடவடிக்கை மற்றும் தடுப்பூசி, அதிகபட்ச தீவிரம் மற்றும் உறுதிப்பாட்டுடன் கூடிய அமலாக்கம் போன்றவற்றால் தொற்று பரவலை திறம்பட கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இதைப்போல அதிகபட்ச பயனாளர்களுக்கு தடுப்பூசி சென்றடையும் வகையில் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதிக்கு இடையில் ஒரு தடுப்பூசி திருவிழாவை கடைப்பிடிக்குமாறும் முதல்-மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தமிழக முதல்-அமைச்சருக்கு பதிலாக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கொரோனா தடுப்பிற்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரதமரிடம் ராஜீவ் ரஞ்சன் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டிஜி.பி. ஜே.கே.திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், இணை இயக்குனர் டாக்டர் வினய் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்