தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் பினராயி விஜயனுக்கு கொரோனா

தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-08 23:07 GMT
திருவனந்தபுரம்,

நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக கேரளா விளங்குகிறது.

அங்கு நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 901 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், நேற்று 4,353 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதியானது. கொரோனா பாதிப்பு விகிதம் 6.81 சதவீதமாக உள்ளது.

33 ஆயிரத்து 621 பேர் தற்போது அங்கு சிகிச்சையில் உள்ளனர்.

அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பினராயி விஜயனையும் (வயது 75) கொரோனா தொற்று விடவில்லை. அவருக்கு கொரோனா பாதித்து இருப்பது நேற்று உறுதியானது.

அவரது மகளுக்கும், மருமகனுக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அவர் கடந்த மாதம் 3-ந்தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். இரண்டாவது டோஸ் இன்னும் எடுத்துக்கொள்ளாத நிலையில் கொரோனா தொற்று பாதித்துள்ளது. தற்போது கண்ணூர் இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அவர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார் என கேரளாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதையொட்டி டுவிட்டரில் நேற்று பதிவிட்ட பினராயி விஜயன், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொள்ள போகிறேன். என்னோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், சுய கண்காணிப்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்