ஐ.ஐ.டி. ரூர்கீயில் 90 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஐ.ஐ.டி. ரூர்கீ மாணவ மாணவியரிடையே நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் மொத்தம் 90 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2021-04-09 02:43 GMT
டேராடூன்,

இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பகள் உச்சமடைந்து வருகின்றன.  இதனால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  தொற்று உயர்வால் மாணவ மாணவியரிடையே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இவற்றில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர்.

நாடு முழுவதிலும் இருந்து ஐ.ஐ.டி.க்கு திரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.  அதன்பின்னர் 15 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலிலும் மாணவர்கள் வைக்கப்படுகின்றனர்.

இந்த கட்டாய தனிமைப்படுத்துதலில் மாணவர்களின் உடல்நலன் கவனிக்கப்படுவதுடன், தனிமைப்படுத்திய மாணவருக்கு உணவும் வழங்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் கடந்த மார்ச் இறுதியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  இதன் முடிவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் ஒருவர் உள்பட 40 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று, காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப மையத்தின் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள ஐ.ஐ.டி. புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட 10 மாணவர்களும் ஐ.ஐ.டி.யில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் வைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வருகின்றனர்.  இதனால் மாணவர்கள் அடங்கிய அடுத்த குழுவின் வருகை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டில் இருந்து அனைத்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளும் ஆன்லைன் வழியே நடந்து வருகின்றன.  ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  வளாகத்திற்குள் வசிக்கும் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை வழிகாட்டி நெறிமுறைகளை அவ்வப்பொழுது பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரகாண்டில் உள்ள ஐ.ஐ.டி. ரூர்கீயில் கடந்த சில நாட்களாக மாணவர்களிடையே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  இதுபற்றி ஐ.ஐ.டி. ரூர்கீயின் ஊடக பொறுப்பு அதிகாரி சோனிகா ஸ்ரீவஸ்தவா கூறும்பொழுது, ஐ.ஐ.டி. ரூர்கீ மாணவ மாணவியரிடையே நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் மொத்தம் 90 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.  அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளார்.

ஐ.ஐ.டி. ரூர்கீயில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  5 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.  ஒரு விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது.  இதனால், உத்தரகாண்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்