இமாச்சலபிரதேச முன்னாள் முதல்மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி

இமாச்சலபிரதேச மாநில முன்னாள் முதல்மந்திரி வீரபத்ர சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-12 17:26 GMT
சிம்லா, 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இமாச்சலபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்மந்திரி வீரபத்ர சிங்கிற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். முன்னதாக, வீரபத்ர சிங்கின் மகனும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான விக்ரமாதித்ய சிங்கிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா உறுதியானது.

இதையடுத்து, அவரது வீட்டில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 86 வயதான வீரபத்ர சிங்கிற்கு கொரோனா பரவி இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்