டெல்லி: முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள போதும் காற்றில் பறந்த சமூக இடைவெளி

டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோதும் காய்கனி சந்தை பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியின்றி நடமாடிய நிகழ்வு வைரஸ் பரவலை அதிகரிக்ககூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-04-20 04:21 GMT
டெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பின் 4-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அங்கு நேற்று ஒரேநாளில் 23 ஆயிரத்து 686 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 77 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 76 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரேநாளில் உச்சபட்சமாக 240 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டெல்லியில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 361 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் நேற்று இரவு 10 மணி முதல் வரும் 26-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். 

அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதும் கட்டுப்பாடுகளை மீறி டெல்லியின் தர்யங்கஞ்ச் பகுதியில் உள்ள காய்கனி சந்தையில் இன்று காலை நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். 

சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் மக்கள் காய்கனி சந்தையில் குவிந்ததால் கொரோனா வைரஸ் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

மேலும் செய்திகள்