ரமேஷ் ஜார்கிகோளி வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்

ரமேஷ் ஜார்கிகோளி வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சிறப்பு விசாரணை குழு போலீசார் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2021-04-24 22:47 GMT
பெங்களூரு,

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி இளம்பெண் ஒருவருடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி வெளியானது. இதையடுத்து ரமேஷ் ஜார்கிகோளி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ஆபாச வீடியோ வெளியானது குறித்து அரசு உத்தரவின்பேரில் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஒரேயொரு முறை மட்டுமே ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராகி இருந்தார். ஆனால் அவருடன் வீடியோவில் இருப்பதாக கூறப்படும் இளம்பெண்ணிடம், போலீசார் 6 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி தகவல்களை பெற்று இருந்தனர். இளம்பெண் கொடுத்த தகவலின்பேரில் ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படவும் வாய்ப்பு இருந்தது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி ரமேஷ் ஜார்கிகோளி விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். இதற்கிடையே கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. போலீஸ் அதிகாரிகளையும் கொரோனா தாக்கி வருகிறது.

இதனால் கொரோனா பீதியால் ரமேஷ் ஜார்கிகோளி வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள சில அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆபாச வீடியோ வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சிறப்பு விசாரணை குழு போலீசார் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்