சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறந்தனரா? மந்திரி சுரேஷ்குமார் பதில்

சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறந்தனரா? என்பது குறித்து மந்திரி சுரேஷ்குமார் பதில் அளித்துள்ளார்.

Update: 2021-05-03 20:18 GMT
பெங்களூரு:
பள்ளி கல்வித்துறை மந்திரியும், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- 
சாம்ராஜ்நகர் ஆஸ்பத்திரியில் 24 கொரோனா நோயாளிகள் ஒரே நாளில் இறந்துள்ளனர். இவர்கள் ஆக்சிஜன் கிடைக்காததால் இறந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் நாங்கள் நடத்திய விசாரணையில், இந்த சாவுகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நடந்தது அல்ல என்று மேல்நோட்டமாக தெரியவருகிறது. இந்த சாவுகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை  பேர் இறந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பெரும்பாலான கொரோனா நோயாளிகள், அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவமனைக்கு வருவது இல்லை. நோய் முற்றிய பிறகே மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு வரும் அனைத்து நோயாளிகளையும் காப்பாற்ற டாக்டர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நிலைமை மோசம் அடைந்த பிறகு ஆஸ்பத்திரிக்கு வந்து இறந்தவர்கள்
அதிகம் உள்ளனர் என்பதற்கு உதாரணங்கள் இருக்கிறது. 24 பேர் இறந்த சம்பவத்தை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இங்கு எண்ணிக்கை முக்கியமல்ல. அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. சாம்ராஜ்நகருக்கு மைசூருவில் இருந்து ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்து ஆக்சிஜன் வருவதில் ஏதாவது குறைபாடுகள் உள்ளதா? என்பது குறித்து
விசாரிக்கப்படும். இதில் தவறு செய்த அதிகாரிகள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாம்ராஜ்நகருக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்து குறித்து உரிய உத்தரவை பிறப்பித்தேன்.
இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்