கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக 4 லட்சம் பதிவு

இந்தியாவில் ஒரே நாளில் 4,01,078 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 3வது நாளாக தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 4 லட்சம் கடந்துள்ளது.

Update: 2021-05-08 04:32 GMT
கோப்பு படம்
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக நாடுகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  தொடர்ந்து ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து சீராக எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3வது நாளாக இன்றும் 4 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து உள்ளது.  ஒரேநாளில் புதிதாக 4,01,078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது நேற்று 4,14,188 ஆகவும், நேற்று முன்தினம் 4,12,262 ஆகவும் இருந்தது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து ஓராயிரத்து 78 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்து 676 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்புகளால் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,187 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இது நேற்று 3,915 ஆகவும், நேற்று முன்தினம் 3,980 ஆகவும் இருந்தது.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 30 ஆயிரத்து 960 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 37,23,446
பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரத்து 544 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்