கொரோனா 2-வது அலைக்காக சிறப்பு சலுகை; வருங்கால வைப்புநிதியில் இருந்து மீண்டும் பணம் எடுக்க அனுமதி

கொரோனா 2-வது அலை காரணமாக, கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் வருங்கால வைப்புநிதியில் இருந்து பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-31 16:30 GMT

அவசர தேவைக்கு அனுமதி

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது, அவசர தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் இருந்து உறுப்பினர்கள் பணம் எடுக்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் இந்த சலுகை அளிக்கப்பட்து. இதை பயன்படுத்தி, கோடிக்கணக்கான உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொண்டனர்.

இந்தநிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. எனவே, இப்போதும் அவசர பண தேவை எழுந்திருப்பதால், கொரோனாவையொட்டி 2-வது தடவையாக பணம் எடுக்க தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

எவ்வளவு எடுக்கலாம்?

இதன்படி, ஒருவர் தனது 3 மாத அடிப்படை சம்பளத்துக்கு (அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து) இணையான பணம் அல்லது அவரது வைப்புநிதி கணக்கில் உள்ள மொத்த தொகையில் 75 சதவீதம் வரை, இவற்றில் எது குறைவான தொகையோ அதை எடுத்துக்கொள்ளலாம். கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட விதிமுறைகளும், நடைமுறைகளும் இப்போதும் பொருந்தும்.

3 நாட்களில் கிடைக்கும்

பொதுவாக, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கணக்கில் இருந்து பணம் கிடைக்க 20 நாட்கள் ஆகும். ஆனால், வைப்புநிதி அமைப்பு, தானியங்கி தீர்வு முறையை அமல்படுத்தி உள்ளது. அதனால், கோரிக்கை கிடைத்த 3 நாட்களில் உறுப்பினரின் வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்படும். தங்கள் சுயவிவரங்களை (கே.ஒய்.சி.) அளித்த உறுப்பினர்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தி, 3 நாட்களில் பணம் பெறலாம்.

இத்தகவலை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

மேலும் செய்திகள்