உ.பி.: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
ராஜ்பார் மருத்துவ சிகிச்சைக்குப்பின் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம் உபாவ் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சப்லு ராஜ்பார் (வயது 25). இவர் அதே கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை நேற்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற ராஜ்பார் அங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜ்பார் மீது போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ராஜ்பாரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், ராஜ்பார் உபாவ் கிராமத்திற்கு அருகே உள்ள முபாரக்பூர் கிராமத்தில் ராஜ்பார் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை அந்த கிராமத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ராஜ்பார் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராஜ்பார் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார்.
இதனை தொடர்ந்து ராஜ்பாரை கைது செய்த போலீசார், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், ராஜ்பாரிடமிருந்து நாட்டு துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ராஜ்பார் மருத்துவ சிகிச்சைக்குப்பின் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.