உள்நாட்டில் பாதுகாப்பு தொழிலுக்கு ஊக்கமளிக்க 108 ஆயுதங்கள், பாதுகாப்பு சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க ராணுவ மந்திரி ஒப்புதல்

உள்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் விதமாக, 108 ராணுவ ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2021-06-01 00:54 GMT
புதுடெல்லி, 

ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் இறக்குமதியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த நிலையை மாற்றவும், உள்நாட்டு ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக, இத்துறையில் தனியாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய பாதுகாப்பு கொள்கையின்படி, பாதுகாப்புத் துறை விற்பனை அளவை வருகிற 2025-ம் ஆண்டளவில் ரூ.1.75 லட்சம் கோடியாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்புத் துறையில் சுயசார்பு முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் 101 ஆயுதங்கள், பாதுகாப்பு சாதனங்களின் பட்டியல் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 108 ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் அடங்கிய 2-வது பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் அடிப்படையிலான இறக்குமதி கட்டுப்பாடு, வருகிற டிசம்பர் முதல் 2025-ம் டிசம்பர் வரை அமலில் இருக்கும்.

மத்திய அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் பாதுகாப்பு தொழிற்சாலை நிர்வாகங்களுடன் நடத்திய பல சுற்று ஆலோசனைக்குப் பின், புதிய இறக்குமதி கட்டுப்பாட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சுயசார்பு பாரதம் நடவடிக்கைகளை ஒட்டியும், பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாகவும் புதிய பட்டியலுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளவற்றில், வான் சார்ந்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், பீரங்கி எந்திரங்கள் மற்றும் ரேடார்கள் அடங்கும்.

அவை உள்ளிட்ட 108 ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள், இனி உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும் என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்