17 ஆண்டுகளாக நீடித்த விவாகரத்து வழக்கு - பெண்ணுக்கு ரூ.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கோர்ட்டு உத்தரவு

மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜீவனாம்ச தொகை வழங்க கணவருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-12-29 14:14 IST

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த துரோனாம்ருஜு ஸ்ரீகாந்த் மற்றும் விஜயலட்சுமி தம்பதிக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு ஆண்டில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. அதனால் இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர்.

இதையடுத்து 2008-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதே சமயம், அவரது மனைவி விஜயலட்சுமி, தங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக மீண்டும் இணைய விரும்புவதாகக் கூறி, திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்காக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம் ஆரம்பத்தில் விவாகரத்து வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து விஜயலட்சுமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கணவன்-மனைவி இடையே உடன்பாடு ஏற்படவே இல்லை.

இந்நிலையில், சுமார் 17 ஆண்டுகளாக நீடித்த இந்த விவாகரத்து வழக்கில் தெலுங்கானா ஐகோர்ட்டு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, இந்த தம்பதி இனி சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், அவர்கள் சட்டப்பூர்வமாக கணவன்-மனைவி என்ற உறவில் தொடர்வதில் எந்த பலனும் இல்லை என்று தெரிவித்தார்.

எனவே, இந்த வழக்கில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, அவர்களது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனைவிக்கு முழு மற்றும் இறுதி ஜீவனாம்ச தொகையாக கணவர் ரூ.50 லட்சம் பணத்தை அடுத்த 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்