திருமணம் செய்யாமல் இளம்பெண்ணுடன் உல்லாசம்... ரூ.1 கோடி நகை, பணம் பறித்த வாலிபர்... பரபரப்பு தகவல்
இளம்பெண்ணின் சகோதரியான சிறுமிக்கும் சுபான்ஷி சுக்லா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிப்பவர் சுபான்ஷி சுக்லா(வயது 27). இவருக்கும், இளம்பெண்ணின் தங்கையான சிறுமிக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் மூலமாக சிறுமியின் வீட்டுக்கு சுபான்ஷி சுக்லா அடிக்கடி சென்று வந்தார்.
இதனால் சிறுமியின் குடும்பத்தினருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக இளம்பெண்ணுக்கும், சுபான்ஷி சுக்லாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.பின்னர் தனக்கு மும்பையில் வேலை கிடைத்திருப்பதாக கூறி, இளம்பெண்ணை சுபான்ஷி சுக்லா அழைத்து சென்றிருந்தார். அங்குள்ள ஒரு குடியிருப்பில் 2 பேரும் திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
அப்போது தான் சுபான்ஷி சுக்லாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதுபற்றி சுபான்ஷி சுக்லாவிடம் இளம்பெண் கேட்டபோது, தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
இதுபற்றி பெற்றோரிடம் இளம்பெண் கூறினார். இதையடுத்து, பாகலகுண்டே போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமறைவான சுபான்ஷி சுக்லாவை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியே வந்தது. அதாவது இளம்பெண்ணை காதலித்து பலாத்காரம் செய்யும் முன்பாகவே, அவரது சகோதரியான சிறுமிக்கும் சுபான்ஷி சுக்லா பாலியல் தொல்லை கொடுத்திருந்தது தெரியவந்தது.
இதுபற்றி வெளியே சொன்னால் சிறுமியையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாகவும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார். அதே நேரத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை பலாத்காரம் செய்ததுடன், அவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை சுபான்ஷி சுக்லா வாங்கியதும் தெரியவந்துள்ளது.
அந்த நகைகள், பணத்தை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சகோதரிகள் தவிர வேறு சில பெண்களையும் காதல் வலையில் வீழ்த்தி சுபான்ஷி சுக்லா மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து அவரிடம் பாகலகுண்டே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.