ஆந்திரா: ஓடும் ரெயிலில் தீ விபத்து - பயணி உயிரிழப்பு
அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.;
ஐதராபாத்,
ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து எர்ணாகுளத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ரெயில் ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 2 மணியளவில் ரெயிலின் பி1, எம்1 ஆகிய இரு ஏ.சி. பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரெயில், அருகில் உள்ள ரெயில் நிலையத்தில் நின்றது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், ரெயில் பெட்டியில் பற்றி எரிந்த தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், ரெயிலுக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் ஒரு பெண் பயணி உயிரிழந்தார். சில பயணிகள் தீ விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.