மோடியின் கவுரவத்தை காப்பாற்றவே முக்கியத்துவம்: கொரோனா பாதிப்பு, மரணங்களை மத்திய அரசு மறைத்து வருகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்பு, மரணம் தொடர்பான உண்மையான தகவல்களை மத்திய அரசு மறைத்து வருகிறது. மோடியின் கவுரவத்தை காப்பாற்றவே முக்கியத்துவம் தரப்படுகிறது என்று பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2021-06-07 17:41 GMT
பிரசார சாதனம்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆரம்பத்தில் இருந்தே கொரோனா தொடர்பான தகவல்களை தனது பிரசார சாதனமாக பயன்படுத்தி வருகிறது. கொரோனாவை எதிர்த்து போரிடுவதற்கான மதிப்புமிக்க ஆயுதமாக பயன்படுத்தவில்லை.நாடு முழுவதும் ஏற்படும் கொரோனா பாதிப்புகளையும், மரணங்களையும் ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிட்டே விகிதாச்சார கணக்கில் வெளியிட்டு வருகிறது. ஆனால், அன்றைய தினத்தின் கொரோனா பரிசோதனை விகிதாச்சாரத்துடன் ஒப்பிட்டு சொன்னால்தான் அது சரியாக இருக்கும்.மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு சொல்லி, தொற்று பாதிப்பு 
குறைவாக இருப்பதுபோல் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் குறைவாக நடத்தப்படுகிறது.

கங்கையில் உடல்கள்
மேலும், அதுபோல், கொரோனா பலி எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்துக் காட்டுகிறது. உதாரணமாக, 1,100 கி.மீ. நீளம் கொண்ட கங்கைக்கரையில் 2 ஆயிரம் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அரசாங்க பலி கணக்கில் அது இடம்பெறவில்லை.உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களில் கங்கையை ஒட்டி பிணங்கள் புதைக்கப்பட்டதை ‘டிரோன்’ மூலம் எடுக்கப்பட்ட படங்கள் காட்டின. உடனே, உத்தரபிரதேச அரசு தூய்மைப்படுத்தும் திட்டம் என்ற பெயரில் அந்த புதைகுழிகளை அழித்து விட்டது.லக்னோ, வாரணாசி, கான்பூர், பிரயாக்ராஜ் என பல நகரங்களில், அரசாங்க பலி எண்ணிக்கைக்கும், சுடுகாட்டு கணக்குக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. அரசாங்க எண்ணிக்கையை விட சுடுகாட்டு கணக்கில் பலியானவர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக உள்ளது.

பெரும் நாசம்
மக்களின் உயிரை காப்பாற்றுவதை விட பிரதமர் மோடியின் கவுரவத்தை காப்பாற்றுவதற்குத்தான் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால் பெரும் நாசம் விளைந்துள்ளது. இதற்கு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். எத்தனையோ விஞ்ஞானிகளும், நிபுணர்களும் தொற்றின் தீவிரத்தன்மையை வெளிப்படையாக தெரிவிக்குமாறு கூறி வருகிறார்கள். மத்திய அரசு அதை செய்யாதது ஏன்?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்