கேரளாவில் பரிதாபம்: கொரோனா நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி 3 பேர் பலி

கேரளாவில் கொரோனா நோயாளியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update:2021-06-08 09:45 IST
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், கண்ணூரை அடுத்த சுண்டப்பாறையை சேர்ந்தவர் பிஜோய் (வயது 45). கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவரின் உடல்நிலை நேற்று அதிகாலையில் திடீரென மோசமானது. ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவரை உடனடியாக கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.

தொடர்ந்து ஆம்புலன்சில் அவரை அழைத்துச் சென்றனர். பிஜோயின் சகோதரி ரெஜினா (37), உறவினர் பென்னி ஆகியோரும் உடன் சென்றனர். ஆம்புலன்சை நிதின் ராஜ் (40) என்பவர் ஓட்டினார். இளையாவூர் அருகே சென்றபோது, ஆம்புலன்ஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஆம்புலன்சின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. டிரைவர் உள்பட 4 பேரும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடினர். அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

பின்னர் தீயணைப்பு படையினர் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி ஆம்புலன்ஸ் கதவுகளை வெட்டி இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது கொரோனா நோயாளி பிஜோய், அவரது சகோதரி ரெஜினா, டிரைவர் நிதின் ராஜ் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். பென்னி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் செய்திகள்