மோடி அறிவித்த இலவச தடுப்பூசி - ரேஷன் பொருட்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி கூடுதல் செலவு

பிரதமர் மோடி அறிவித்த 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படும் இலவச தடுப்பூசி மற்றும் 80 கோடி பேருக்கான இலவச ரேஷன் பொருட்களுக்காக கூடுதலாக ரூ.1.45 லட்சம் கோடி செலவாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Update: 2021-06-09 02:59 GMT
புதுடெல்லி, 

18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்காக வருகிற 21-ந் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க இருப்பதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். தடுப்பூசிக்காக இனி மாநிலங்கள் நிதி செலவிட வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

இதைப்போல கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களை பாதுகாப்பதற்காக வருகிற நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சுமார் 80 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த 2 மிகப்பெரும் திட்டங்களுக்காக மத்திய அரசு மிகப்பெரும் நிதியை, அதாவது ரூ.1.45 லட்சம் கோடி அளவுக்கு கூடுதலாக செலவிட வேண்டும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அந்தவகையில் இலவச தடுப்பூசிக்காக ரூ.45 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை (ரூ.35 ஆயிரம் கோடி) விட அதிகமாகும்.

இதைப்போல சுமார் 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் 1 கிலோ பருப்பு என நவம்பர் வரை வழங்குவதற்கு ரூ.1.1 லட்சம் கோடி முதல் ரூ.1.3 லட்சம் கோடி வரை ஆகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் இரு திட்டங்களுக்காக மத்திய அரசு கூடுதலாக ரூ.1.45 லட்சம் வரை செலவு செய்யும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்