மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை - பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.;
ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டம் சோஸ்டியில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இதுவரை 98 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 180 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீர், கிஸ்த்வாரில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன, மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என பதிவிட்டுள்ளார்.