காஷ்மீர் மேகவெடிப்பு: 46 பேர் பலி; எண்ணிக்கை உயர கூடும் என அச்சம்

காஷ்மீர் காவல் துறை, தீயணைப்பு படைகள், சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட படைகளும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன.;

Update:2025-08-15 05:27 IST

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கிஸ்த்வார் மாவட்டம் சிசோடி கிராமத்தில் நேற்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி கொண்டனர்.

அவர்களில் 46 பேர் பலியாகி உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. 100 பேர் வரை படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள், பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றி மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் கூறும்போது, மச்சைல் மாதா கோவில் அருகே நடந்த இந்த மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் தெரிவித்து உள்ளார்.

வெள்ளபெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் காவல் துறை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படைகள், சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட படைகளும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்