காஷ்மீர்: ‘பிஎம் கேர்ஸ்’ நிதியில் 500 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை அமைப்பு

‘பிஎம் கேர்ஸ்’ நிதியில் காஷ்மீரில் 500 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-12 12:33 GMT
ஸ்ரீநகர்,

கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி உருவாக்கினார். 

இதில் பிரதமர் மோடி தலைவராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த ’பிஎம் கேர்ஸ்’-ல் யார் வேண்டுமானாலும் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பலர் பிஎம் கேர்ஸ் கணக்கிற்கு நிதி வழங்கி வருகின்றனர். 

கோடிக்கணக்காண ரூபாய் பிஎம் கேர்ஸ் கணக்கிற்கு நிதியாக வந்துள்ளது. நன்கொடையாக வந்துள்ள இந்த நிதி கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா சிகிச்சை மையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் ஆலைகள் அமைத்தல், வெண்டிலேட்டர்கள் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு மற்றும் கொரோனா சிகிச்சை பணிகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீநகரில் 500 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் 'பிஎம் கேர்ஸ்’ நிதி மூலம் 17 நாட்களில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக 500 படுக்கை வசதியை கொண்ட இந்த மருத்துவமனையில் 125 படுக்கைகள் ஐசியூ வசதி பெற்றவை. அதில் 25 படுக்கைகள் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.     

மேலும் செய்திகள்