இஸ்ரேலின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள பென்னட்டிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரேலின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நஃப்தலி பென்னட்டிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-14 05:07 GMT
புதுடெல்லி,

இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் யேஷ் அதித் கட்சி தலைவர் யெய்ர் லாப்பிட் தலைமையில் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் மூலம் இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னெட் இன்று பதவியேற்றார். இதன் மூலம் 12 ஆண்டுகள் இஸ்ரேல் பிரதமராக செயல்பட்டுவந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நஃப்தலி பென்னெட்டிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலின் புதிய பிரதமர் பென்னெட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேலின் பிரதமராக பொறுப்பேற்ற நஃப்தலி பென்னெட்டிற்கு வாழ்த்துக்கள். நாம் தூதரக உறவை புதுப்பித்து அடுத்த ஆண்டுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில் உங்களை சந்தித்து நமது இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த நான் ஆர்வமாக உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல், பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில் பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், நெதன்யாகு உங்கள் நீங்கள் பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் இஸ்ரேல் - இந்திய உறவில் உங்கள் தலைமை மற்றும் தனிப்பட்ட கவனத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகள்