சிவசங்கர் பாபாவை தமிழகத்துக்கு அழைத்துச் செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி

டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழகத்துக்கு அழைத்துச் செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Update: 2021-06-16 13:46 GMT
புதுடெல்லி,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில், சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று டேராடூன் விரைந்தனர். ஆனால், இன்று காலை குறிப்பிட்ட மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா தப்பிச்சென்றுள்ளார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. 

இந்த நிலையில், தெற்கு டெல்லியின் காசியாபாத்தில் சிவசங்கர் பாபா பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் டெல்லியின் காசியாபாத் பகுதியில் உள்ள சித்தரஞ்சன் என்ற இடத்தில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை மடக்கிப்பிடித்தனர். சிவசங்கர் பாபாவை கைது செய்ய டெல்லி போலீசாரும் உதவினர்.

கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை டெல்லி சாகேத் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி, தமிழக்திற்கு அழைத்துச் செல்ல போலீஸ் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை இன்று அல்லது நாளை சென்னை அழைத்து வர சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்