மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு போலி கொரோனா தடுப்பூசி போட்ட புகாரில் 4 பேர் கைது

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு போலி கொரோனா தடுப்பூசி போட்ட புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-18 23:00 GMT
கோப்பு படம்
மும்பை, 
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு போலி கொரோனா தடுப்பூசி போட்ட புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் மத்திய பிரதேசத்தில் சிக்கினாா். இவர்கள் 9 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தி மோசடி நடத்தியது தெரியவந்தது.
 அடுக்குமாடி குடியிருப்பில் முகாம்
மும்பை காந்திவிலி எஸ்.வி. ரோடு பகுதியில் ஹிரானந்தானி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள குடியிருப்பு சங்கத்தை கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பிரபல தனியார் ஆஸ்பத்திரியின் பெயரில் ஒரு கும்பல் அணுகி உள்ளது. இதையடுத்து கடந்த மே 30-ந் தேதி ஹிரானந்தானி கட்டிட குடியிருப்புவாசிகளுக்கு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முகாமில் 390 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். அதற்காக அவர்கள் தலா ரூ.1,260 செலுத்தினர். மொத்தம் தடுப்பூசி முகாம் நடத்தியவர்களுக்கு ரூ.4.56 லட்சம் வழங்கப்பட்டு இருந்தது. தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. குடியிருப்பு சங்கம் சார்பில் கேட்ட பிறகு 3 வெவ்வேறு தனியார் ஆஸ்பத்திரிகள் பெயரில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
போலி தடுப்பூசி புகார்
ஆனால் முகாமில் தடுப்பூசி போட்டவர்களின் பெயர் விவரங்கள் கோவின் இணையதளத்தில் இடம்பெறவில்லை. இதனால் குழப்பம் அடைந்தனர். இதேபோல முகாம் நடந்த போது, ஏற்கனவே சீல் உடைக்கப்பட்டு இருந்த குப்பிகளில் இருந்த தடுப்பு மருந்து போடப்பட்டதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டினர்.
மேலும் தடுப்பூசி போட்ட யாருக்கும் காய்ச்சல், உடல் வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இதனால் தங்களுக்கு போடப்பட்டது போலி தடுப்பு மருந்தாக இருக்குமா என்ற சந்தேகம் குடியிருப்பு மக்களுக்கு கிலியை ஏற்படுத்தியது.
 வழக்குப்பதிவு
இதையடுத்து தடுப்பூசி முகாம் நடத்தியவர்கள் மீது ஹிரானந்தானி குடியிருப்பு சங்க உறுப்பினர் ஒருவர் காந்திவிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று ஹிரானந்தானி குடியிருப்பில் தடுப்பூசி முகாம் நடத்த மாநகராட்சி தரப்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் முகாம் நடந்த போது அங்கு மருத்துவ அதிகாரி ஒருவர் கூட இல்லை. இதேபோல முகாமில் பயன்படுத்தப்பட்ட மருந்து அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் இருந்து வாங்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தடுப்பூசி முகாம் நடத்தியவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மோசடி, முறைகேடு, கலப்பட மருந்து, கலப்பட மருந்தை விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4 பேர் அதிரடி கைது
இந்தநிலையில் போலீசார் முகாம் ஏற்பாடு செய்தவர், போலி சான்றிதழ் வழங்கியவர்கள் என 4 பேரை கைது செய்து உள்ளனர். இதேபோல முகாம் நடத்த தடுப்பு மருந்து வாங்கி கொடுத்தவர் மத்திய பிரதேசத்தில் உள்ள மதுரா ரெயில் நிலையத்தில் பிடிப்பட்டுள்ளார். அவரை மும்பை கொண்டுவர போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட கும்பல் மேலும் 9 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தி இருப்பது அம்பலமாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தடுப்பு மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திய கும்பல் வசதிப்படைத்தவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிப்புகளில் முகாம் நடத்தி பணமோசடி வேலையில் ஈடுபட்டு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் தடுப்பூசி போட விரும்பும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்