மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு

மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப்பதிவு செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-19 22:36 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மற்றொரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்துகிறபோது இது அவர்களின் மன உறுதியைக் குலைத்து விடும், பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படுத்தி விடும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். இது சுகாதார பாதுகாப்பு முறையை மோசமாக பாதித்து விடும். தற்போதைய சூழலில், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறபோது, தாக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். தாக்குதல் நடத்துகிறவர்கள் மீது எப்.ஐ.ஆர். (வழக்கு) பதிவு செய்ய வேண்டும். இது போன்ற வழக்குகளில் துரிதமாக விசாரணை நடத்த வேண்டும். தேவையான இடத்தில், 2020-ம் ஆண்டு இயற்றிய தொற்றுநோய்கள் திருத்த சட்டத்தின் விதிமுறைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

இந்த சட்டத்தின்படி, மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது யாரேனும் தாக்குதல்கள் நடத்தினால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.2 லட்சம் வரையில் அபராதமும் விதிக்க முடியும். தாக்குதலில் கொடுங்காயங்கள் ஏற்பட்டிருந்தால், தாக்கிய நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.5 லட்சம் வரையில் அபராதமும் விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்