இஸ்ரேலிய தூதரக குண்டு வெடிப்பு சம்பவம் - கார்கிலை சேர்ந்த 4 மாணவர்கள் கைது

டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அமைந்துள்ள பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி குண்டு வெடிப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-24 13:21 GMT
டெல்லி,

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் தலைநகர் டெல்லியின் அவுரங்கசிப் சாலை பகுதியில் அமைந்துள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலிய தூதரகம் அருகே கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி குண்டு வெடிப்பு ஏற்பட்டது. 

இந்த குண்டு வெடிப்பில் உயிரிழப்பு, காயம் போன்ற சம்பவங்கள் ஏற்படாத போது இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணையை தொடங்கியது. டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரும் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

பல மாதங்களாக விசாரணை நடைபெற்ற போதும் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் யார்? என்பது தெரியாமல் குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பல கட்ட விசாரணையில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படை அமைப்பிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கு உரிய நபர்கள் 2 பேரின் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை என்ஐஏ கடந்த வாரம் வெளியிட்டது. மேலும், சந்தேகத்திற்குரிய அந்த 2 நபர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்ஐஏ அறிவித்தது.

இந்நிலையில், இஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு தொடர்பாக லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தை சேர்ந்த 4 மாணவர்களை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கார்கில் சென்ற டெல்லி போலீசார் 4 மாணவர்களை டெல்லிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் கார்கிலை சேர்ந்த 4 மாணவர்களுக்கும், இஸ்ரேலிய தூதரக குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, அந்த மாணவர்கள் 4 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 மாணவர்களும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் குண்டு வெடிப்பு தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரியவந்துள்ளது. 

இஸ்ரேலிய தூதரக குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கார்கிலை சேர்ந்த 4 மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. 

மேலும் செய்திகள்