பீகார் அரசு ஊழலில் திளைக்கிறது : சொந்த மந்திரியே கூறியதால் நிதிஷ்குமாருக்கு தர்மசங்கடம்

துறை அதிகாரிகள் கூட தனது பேச்சை கேட்க மறுப்பதாக பீகார் மாநில சமூக நலத்துறை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2021-07-02 12:30 IST
பாட்னா,

பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை. அதிகாரிகள் துறை மந்திரியின் பேச்சையே கேட்பதில்லை என முதல் மந்திரி நிதிஷ்குமாரின் மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள மந்திரியே கூறியிருப்பது மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.  பீகார் மாநிலத்தில் சமூக நலத்துறை மந்திரியாக இருக்கும்  மதன் சாஹ்னி தான் இத்தகைய குற்றச்சாட்டை தனது சொந்த அரசு மீது சுமத்தியுள்ளார்.  

தனது துறையில்  சில நியமனங்களுக்கும் பணி மாறுதல்களுக்கும் மந்திரி என்ற முறையில் தான்  ஒப்புதல் அளித்த பிறகும் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ள மதன் சாஹ்னி, அதிகாரிகளுக்கு இத்தகைய அதீத துணிச்சல் இருக்கும் போது,  நான்  ஏன் பதவியில் இருக்க வேண்டும்? சில சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காக மட்டும் நான் மந்திரியாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றார். 

முதல் மந்திரியிடம் இது பற்றி கூறினீர்களா? என்று கேட்ட போது, நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்.  நான் அவரை மிரட்டுவதாக கூட அவர் நினைத்து விடலாம்” என்றார். முதன்மை செயலாளர் தனது பேச்சை கேட்பது இல்லை எனவும் சனிக்கிழமை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் கடிதத்தை தயார் செய்து வருவதாகவும் கூறினார். 

மேலும் செய்திகள்