ஆட்கடத்தல் சட்ட மசோதாவுக்கு ஆலோசனைகளை தெரிவிக்கலாம் - மத்திய அரசு

ஆட்கடத்தல் சட்ட மசோதாவுக்கு ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.;

Update:2021-07-05 01:22 IST
புதுடெல்லி,

ஆட்கடத்தலை, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், ஆட்கடத்தல் (தடுப்பு, நலம் பேணல் மற்றும் மறுவாழ்வு) சட்ட மசோதா 2021-ஐ மத்திய அரசு கொண்டு வருகிறது.

இ்ந்த மசோதாவின்படி, பாதிக்கப்பட்டவர்களின் நலம் பேணும் நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும். அவர்களின் உரிமைகளை மதித்து, ஆதரவான சட்ட, பொருளாதார, சமூக சூழல் உருவாக்கப்படும். அதேநேரம், குற்றம் இழைத்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்படும். எல்லை தாண்டி ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களும் தப்பிக்க முடியாது.

ஒருவர் ஆட்கடத்தலில் ஈடுபட்டது சட்டப்படி நிரூபிக்கப்பட்டால், அவருக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் பல்வேறு மோசமான ஆட்கடத்தல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைவரும் தங்கள் ஆலோசனைகளை வருகிற 14-ந் தேதிக்குள், santanu.brajabasi@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்