பஞ்சாப்பில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 ராணுவ வீரர்கள் கைது

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மே மாதம் 24ந் தேதி பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரரான ரன்வீர் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-06 18:44 GMT
அவர் 70 கிராம் ஹெராயின் போதைப்பொருளை எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு கடத்த முயன்ற போது போலீசில் சிக்கினார். அப்போது அவரிடம் இருந்து இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்த ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது பற்றி அவரிடம் விசாரித்ததில் அமிர்தசரஸ் நகரில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களான ஹர்பிரீத் சிங் (வயது 23) மற்றும் குர்பேஸ் சிங் (23) ஆகிய இருவரும் பணத்துக்காக ராணுவ ரகசியங்களை திருடி ரன்வீர் சிங் மூலமாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு வழங்கி வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் போலீசார் ஹர்பிரீத் சிங் மற்றும் குர்பேஸ் சிங்கின் செயல்பாடுகளை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் அவர்கள் ராணுவ ரகசியங்களை திருடி வழங்கியது மட்டுமல்லாமல் ஐ.எஸ்.ஐ-க்காக உளவு பார்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்