மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 12 பேர் பலியான சம்பவம்: முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல்
மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 12 பேர் பலியான சம்பவத்துக்கு, அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
போபால்,
வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதன்காரணமாக உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனித்தனியாக மின்னல் தாக்கியதில் மொத்தம் 68 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அதில் மத்திய பிரதேசத்தில் 12 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் தனித்தனியாக மின்னல் தாக்கிய சம்பவங்களில் நான்கு சிறுமிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 12 பேர் பலியான சம்பவத்துக்கு, அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் காரணமாக 12 விலைமதிப்பற்ற உயிர்கள் அகால மரணம் அடைந்த செய்தியால் நான் வருத்தப்படுகிறேன். அவர்களின் ஆத்மாக்களுக்கு அமைதியையும் அவர்களின் குடும்பங்களுக்கு பலத்தையும் அளிக்க நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.