புதுவையில் மதுபானங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு வரி: இன்று முதல் அமல்

புதுவையில் மதுபானங்களுக்கு 20 சதவீதம் கூடுதல் வரி விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-14 22:21 GMT
கோப்புப்படம்
புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த (2020) ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கின் தொடக்கத்தில் மதுபானக் கடைகள், மதுபார்கள் மூடப்பட்டன. அதன்பின் 2 மாதங்களுக்குப் பிறகு மே 24-ந் தேதி மீண்டும் மதுக்கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.

அப்போது மதுபானங்களுக்கு கொரோனா வரி (தமிழகத்துக்கு இணையாக) விதிக்கப்பட்டது. இந்த வரி கடந்த ஏப்ரல் மாதம் வரை அமலில் இருந்தது. அதையடுத்து இந்த வரி ரத்து செய்யப்பட்டது. இதனால் மதுபானங்கள் அதிபட்ச சில்லரை விலைக்கு விற்பனையானது.

இந்தநிலையில் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் அதிபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து திடீரென புதுவை அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை கலால்துறை துறை துணை ஆணையர் சுதாகர் பிறப்பித்துள்ளார். இதன் மீதான நடவடிக்கை உடனடியாக இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி புதுவையில் அனைத்து மதுபானங்களுக்கும் கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து விற்பனை செய்யப்படும். அதாவது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் 20 சதவீதம் சிறப்பு வரியை சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும்.

மேலும் செய்திகள்